KDMC Nesansala Training Centre Kalmunai யின் 8வது பட்டமளிப்பு
விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் எஸ்.எம்.ஹாஜா தலைமையில் கடந்த 24.09.2022ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் 85 பட்டதாரி மாணவர்கள் பல்வேறு துறைகளில் பட்டங்களைப் பெற்றதுடன், பிராந்தியத்தில் ஊடகத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் பாறுக் ஷிஹானுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கொழும்பு லேடி ரிஜ்ட்வே சிறுவர் வைத்தியசாலையின் (Colombo Lady Ridgeway Hospital for Children) முன்னாள் பிரதிப்பணிப்பாளரும் கல்முனை அபிவிருத்தி முகாமைத்துவ சபையின் தலைவருமான வைத்திய கலாநிதி ஏ.எல்.எம் நஸீர் கலந்து சிறப்பித்தார்.
இளம் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் யாழ்.பல்கலைக்கழக பட்டதாரி என்பதுடன், அதே பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பட்டப்படிப்பினையும் பூர்த்தி செய்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டிலிருந்து தமிழ், சிங்கள, ஆங்கில ஒலி, ஒளி மற்றும் பத்திரிகை, இலத்திரனியல் ஊடகங்களிலும் செய்தியாளராகப் பணியாற்றி வருகின்றார்.
புலனாய்வுத்துறை ஊடகவியலாளராகவும் தனது பணியினை செவ்வனே நிறைவேற்றி அநீதிக்கெதிரான குரலாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ள ஷிஹான், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் வழிகோலியுள்ளார்.
இப்பட்டமளிப்பு விழாவில், பட்டதாரி மாணவர்கள், பெற்றோர்கள், அதிதிகள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.