மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல்
நாணயத்தை, ரோயல் மின்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயம் நேற்றுமுன்தினம் (30) வெளியிடப்பட்டது.
இந்த நாணயங்கள் படிப்படியாக புழக்கத்தில் வருவதால், மக்கள் டிசம்பர் மாதத்திலிருந்து சிறிய மாற்றங்களில் சார்லஸ் மன்னரின் உருவத்தை காணத்தொடங்குவர்.
இதற்கிடையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் ஒக்டோபர் 3ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒரு நினைவு நாணயத்தை ரோயல் மின்ட் நிறுவனம் வெளியிடும்.
இதுதவிர, மன்னரின் உருவம் கொண்டுள்ள சிறப்பு 5 பவுண்ட் நாணயமும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 பென்ஸ் நாணயத்தில் மன்னர் சார்லஸ் முகம் இடது புறம் பார்த்தபடி உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த அவரது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது முகம் வலது புறம் பார்த்தப்படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 27 பில்லியன் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருப்பதாவும், அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.