அரசியல் நிகழ்ச்சி நிரல்களற்ற விதத்தில், கிராமத்தின்
அதிகாரத்தை, நாட்டின் பொருளாதார நிர்வாகமாக மாற்றிமைத்தல் வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.களுத்துறை மாவட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று , களுத்துறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே பிரதமர் இதனை வலியுறுத்தினார்.
நாம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியிலும், அந்நியச் செலாவணி நெருக்கடியிலும் சிக்கித் தவிப்பதால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசியல் வேறுபாடுகளின்றி அனைவரும் கைகோர்க்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
ஒரு நாடு என்ற ரீதியில், விவசாயத் துறையில் மிகையைப் பேணிச்செல்லுதல் வேண்டும்.
மறுபுறம் பெருந்தோட்டக் கைத்தொழில் எமது ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரு முக்கிய துறையாகும். நாம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அதிலிருந்து மீளுவதற்கு நாம் ஒன்றிணைந்து, முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.
கிராம சேவை பிரிவுகள் முதல் பிரதேச செயலகம் வரை, மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டம் என அனைவரும் உணவு பாதுகாப்பு செயற்பாட்டில் பங்குகொள்ளக்கூடிய ஒரு வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை முன்னுரிமை செயற்பாடாகக் கருதுகிறோம். இந்த இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான இயந்திர உபகரணங்கள், பசளைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகள் , அவற்றை சந்தைக்கு கொண்டு வருதல், நல்ல விலையை வழங்குதல் என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
இந்த நெருக்கடியானது நாம் அனைவரும் எதிர்நோக்கும் ஒரு தேசிய பிரச்சினையாகும். இந்த நெருக்கடியை அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். இதிலிருந்து மீண்டு வரக்கூடிய பெரும்போக காலப்பகுதிக்கு நாம் வந்துவிட்டோம். இந்த நெருக்கடியான காலத்தை வெற்றிகொண்டு நாம் முன்னேற வேண்டும். அதற்கு அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
களுத்துறை மாவட்டத்திலேயே அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மகாவலி ஆற்றை விட அதிகளவான நீர் இந்த மாவட்டத்திலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் உள்ள கடலில் கலக்கிறது. இந்த உணவு நெருக்கடியை சமாளித்து தேசிய அபிவிருத்தித் திட்டத்தினை நாம் முன்னெடுத்தல் வேண்டும்.
இதற்காக பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில், பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்படாத அரச காணிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அத்தகைய காணிகள் அடையாளம் காணப்படல் வேண்டும்.
கிராம அலுவலர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கிராமிய மட்டத்திலான குழுக்களும் இது பற்றிய தகவல்களை மேலிடத்திற்கு கொண்டு செல்லுதல் வேண்டும். கிராம மட்டத்திலான வளர்ச்சி மிகவும் முக்கியமானது. அடுத்த வார இறுதிக்குள் உரிய அனைத்து தகவல்களையும் பெற எதிர்பார்க்கிறோம். தேவையான அனைத்து வளங்களும் வழங்கப்படும். அதற்குத் தேவையான சக்தியை ஒவ்வொரு கிராம சேவை பிரிவுக்கும் நாம் வழங்குவோம்.
கடற்றொழிலானது நமது உணவு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மீன்பிடித் தொழிலானது மத்திய வங்கியின் பல்வகைப்படுத்தலுக்குள் உள்ளடங்காது. முன்னொரு காலத்தில் அது விவசாயத் துறையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. நமது உணவு உற்பத்தியின் ஒரு பகுதியாக கடற்றொழிலை அங்கீகரித்தல் வேண்டும். மேலும், மீன்பிடித் தொழிலானது மக்களின் புரதப் பங்களிப்பை அதிகரிக்கின்றது. மேலதிக உற்பத்தியை ஏற்றுமதி செய்து நல்ல வருவாயை ஈட்டக்கூடிய விதத்தில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்தல் வேண்டும். எனவே மீன்பிடித் துறைக்கு அரசின் பங்களிப்பு நிச்சயம் அவசியம்.
தேயிலை, இறப்பர், தெங்கு பயிர்களுக்கு அடுத்தபடியாக, அதிக அண்ணியச் செலாவணியை ஈட்டித் தருவது, மீன்பிடித் தொழில்தான். உலகமே நம்மிடம் எதிர்பார்க்கும் ஏற்றுமதித் துறை இதுவே.
நம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் பற்றி சரியான விதத்தில் அறிக்கை செய்தல் வேண்டும். அவர்கள் கவனிக்கப்படாதுவிடல்கூடாது என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் பல தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் தேவைகளை உறுதி செய்வதற்கும் அவர்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். ஏற்றுமதி மற்றும் விற்பனை மட்டில் விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்துதல் வேண்டும்.
இந்த நெருக்கடியை புதிய வழியில் எதிர்கொள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
கிராம மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு, கிராம மட்டத்திலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான புதிய வேலைத்திட்டத்திற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. அரசியல் கோட்பாடுகளற்ற கிராமத்தின் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்.
கிராம அதிகாரத்தை பொருளாதார நிர்வாகமாக மாற்ற வேண்டும். கிராம சக்தியை நாடு முழுவதும் கொண்டு செல்லும் திட்டங்களும் தொடங்கப்பட வேண்டும்.
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, இராஜாங்க அமைச்சர்களான அனூப பஸ்குவல், பியல் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன, லலித் எல்லாவல, யதாமினி குணவர்தன, அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, களுத்துறை மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.