ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு தீர்மானித்துள்ளார் என நம்பகரமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கான ஆவணங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும், அவற்றை உரிய தரப்புகளிடம் ஒப்படைத்த பிறகு பஸில் ராஜபக்ச நாடு திரும்புவார் எனவும் தெரியவருகின்றது.
நாடு திரும்பிய பின்னர் அவர் தீவிர அரசியலில் இறங்குவார் எனவும், நவம்பரில் நடைபெறவுள்ள மொட்டு கட்சி மாநாட்டின்போது முக்கிய சில அறிவிப்புகளை விடுப்பார் எனவும் அறியமுடிகின்றது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. எனினும், பஸிலுக்காக அந்த தடை ’20’ ஊடாக நீக்கப்பட்டது.
இந்நிலையில் அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டத்தில் அத்தடை மீளவும் உள்வாங்கப்பட்டுள்ளது. பதவி பறிபோவதற்கு முன்னரே இட்டை குடியுரிமை உடைய பஸில் எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார். எனினும், இரட்டை குடியுரிமை தடைக்கு மொட்டு கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு பஸில் தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக கோட்டாபய ராஜபக்சவும், இரட்டை குடியுரிமையை துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.