திருத்தப் பணிகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் தலா 300 மெகாவோட் கொண்ட மூன்று அலகுகள் செயற்படுகின்றன.
அதன் இரண்டாவது அலகு திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளதோடு முதலாம் மற்றும் மூன்றாம் அலகுகளின் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்படி, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து தேசிய மின்கட்டமைப்புடன் 600 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டு நிலக்கரி கப்பல்களுக்கான முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.