நாட்டை முன்னேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் இருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில், ஒரு சிறந்த பாதைக்கு திரும்பியுள்ளதாக தாம் நம்புவதாக களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.
"களுத்துறையில் இருந்து ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இந்த பொது பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்.
இலங்கை இன்று பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், அந்த சவால்களை வெற்றிகொள்ளும் பலம் கட்சிக்கு இருப்பதாகவும், நாட்டு மக்களுக்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் அங்கு தெரிவித்தார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் காப்பாற்றி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்த அவர், ஜனாதிபதி ஐ.தே.க.வைச் சேர்ந்தவர் என்பதாலேயே அப்போது அவரை திட்டினாலும், தற்போது அவர் சரியான பாதையில் செல்கிறார் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், அவருக்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்த பயணத்தை தொடர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாடுபடுவதாக குறிப்பிட்டார்.