நாட்டின் வருவாயில் 75 வீதம் – உணவுக்காக
செலவிடப்படுவதாக பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களைக் கண்டறிவதற்கான தேசிய கவுன்சிலின் உப குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவர் மட்டுமே ஊட்டச்சத்துள்ள சரியான உணவைப் பெறுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (18) நாடாளுமன்றத்தில் மேற்படி உப குழு கூடிய போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, உரத்தின் தேவை, அறுவடை குறைதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் குறித்து நிபுணர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
குறிப்பாக பத்து வருடங்களாக நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்துள்ளமையினால், இந்த நிலைமையை சமாளிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் இடைக்கால நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, வருமானம் மற்றும் வீட்டுச் செலவுகள் குறித்த கணக்கெடுப்பை உடனடியாக நடத்துமாறு நிதியமைச்சுக்கு உபகுழுத் தலைவர் அறிவித்துள்ளார்.
நாட்டில் வரி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் வருமானத்தை அதிகரிக்க முடிந்தாலும், தொழில்களை நிலைநிறுத்துவதில் சிக்கல், வேலை இழப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலைமைகள் ஆகியவை பக்க விளைவுகளாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.