(எம்.எப்.எம்.பஸீர்)
செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சிஐடியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியை இன்று ( 12) சிஐடியின் சிறப்புக் குழுவினர் நான்கு முன்னணி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடாத்தியுள்ளனர்.
கோட்டை நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விசேட அனுமதியின் பிரகாரம், சிறைக்காவலர்களின் பாதுகாப்பின் கீழ் அவர் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டு, ஸ்தல விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், பல ஆவணங்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிஐடி.க்கு இந்த மோசடி தொடர்பில் முதல் முறைப்பாட்டை முன்வைத்த அப்துல் சத்தார் என்பவர் முதல் இதுவரை 9 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவற்றின் பிரகாரம் மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் 500 கோடி ரூபாவை எட்டியுள்ளதாகவும், இது 1,000 கோடி ரூபாவரை செல்லும் என அனுமானிப்பதாகவும் குறித்த உயரதிகாரி சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையிலேயே இன்று ( 12) சந்தேக நபரான திலினி பிரியமாலி, திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தை நடத்தி சென்ற கொழும்பு – கோட்டை உலக வர்த்தக மைய கோபுரத்தின் 34 ஆவது மாடியில் அமைந்துள்ள சொகுசு அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதன்போது அவருக்கு கைவிலங்கு எதுவும் இடப்பட்டிருக்கவில்லை.அங்கு வைத்து குறித்த அலுவலகத்திலிருந்த பல ஆவணங்கள் சிஐடி பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
இதனைவிட மேல் மாகாணத்தில் அமையப் பெற்றுள்ள மேலும் 3 இடங்களுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.