சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையொன்றின் ஊடாக இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலை உயர்வடைந்துவருவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன்னதாகவே தொடர்ச்சியான காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள், பிராந்திய ரீதியான முரண்பாடுகள், கொரோனா வைரஸ் பரவல் என்பன உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தாக்கங்களைத் தோற்றுவித்துதுடன் உணவுப்பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணமாக அமைந்தன.
இந்நிலைவரம் உக்ரேன் – ரஷ்ய போரை அடுத்து மேலும் தீவிரமடைந்தது. இது குறிப்பாக உணவு மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகள் பன்மடங்காக அதிகரிப்பதற்கு வழிவகுத்ததுடன் இறக்குமதிகளில் தங்கியிருக்கும் நாடுகள்மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்விளைவாகத் தோற்றம்பெற்ற உணவுப்பாதுகாப்பின்மையினால் உலகளாவிய ரீதியில் சுமார் 345 மில்லியன் மக்கள் மிகுந்த அச்சுறுத்தல் நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், தினமும் சுமார் 828 மில்லியன் மக்கள் பசியுடன் உறங்கச்செல்வதாகவும் உலக உணவுத்திட்டம் கவலை வெளியிட்டுள்ளது.
உணவுப்பாதுகாப்பின்மை என்பது உலகளாவிய ரீதியில் ஓர் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், அதன்விளைவாக 48 நாடுகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலான நாடுகள் குறைந்த வருமானம் பெறும் நாடுகளாகக் காணப்படுவதுடன் இறக்குமதிகளுக்கான உக்ரேன் மற்றும் ரஷ்யாவிடம் பெருமளவிற்குத் தங்கியிருக்கும் நாடுகளாகவும் உள்ளன என்று உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியிருப்பதுடன் அந்த 48 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.