Our Feeds


Thursday, October 27, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிலிருந்து 35 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்கள் மாயம்: கணக்காய்வில் அம்பலம்




ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின்

ஊடகப் பிரிவில் இருந்து சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான பல பொருட்கள் காணாமல் போயுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.


கணக்காய்வு செய்யப்பட்ட திகதி வரை, காணாமல் போன பொருட்கள் குறித்து – எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..


நொவம்பர் 18, 2019 அன்று – ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவரின் தகவலின் படி, ஜனாதிபதி மாளிகையின் களஞ்சியக் காப்பாளர் நடத்திய சோதனையில் 61 பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. ஆனால் மார்ச் 2022 வரை அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.


2015 முதல் 2020 ஜனவரி வரை வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள 52 கணினிகளில், 4 கணினிகள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்று கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே காலப்பகுதியில் ஊடகப்பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 3.4 மில்லியன் ரூபா பெறுமதியான 45 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஐபேட்களில், 14 கைத்தொலைபேசிகளும் 03 ஐபேட்களுமே திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 09 கைத்தொலைபேசிகள் மற்றும் 02 ஐபேட்கள் இயங்கும் நிலையில் இல்லை.


ஊடகப் பிரிவின் பொருட்கள் தொடர்பில் – பொறியியலாளர்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையின் பிரகாரம், சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான பெருந்தொகையான பொருட்கள் ஊடகப் பிரிவில் காணாமல் போயுள்ளன.


இதேவேளை, 17 மில்லியன் ரூபா பெறுமதியான 104 மடிக்கணினிகளில் 26 மடிக்கணினிகள் மற்றும் இரண்டு மேக்புக் ஏர் வகை (MacBook Air type) மடிக்கணினிகள் மாத்திரமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.


கதிர்காமத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்த 12 பொருட்களும், அனுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்த இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளும் காணாமல் போயுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கணக்காய்வு திகதி வரை, இவை தொடர்பில் எந்தவிசாரணையும் நடத்தப்படவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »