Our Feeds


Saturday, October 29, 2022

Anonymous

டயானா கமகேவின் 2 பாஸ்போட் விவகாரம் - அறிக்கை வேண்டுமென நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவு

 



(எம்.எப்.எம்.பஸீர்)


பிரித்தானிய பிரஜையாக இருந்துகொண்டு, போலியான தகவல்களை சமர்ப்பித்து, இரு கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறி, ஐக்கிய மக்கள் சக்தி பாரளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், அவ்விசாரணையின் முன்னேற்றம் குறித்த பூரண அறிக்கையினை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 27) உத்தரவிட்டது.   

சி.ஐ.டி.யின் பொறுப்பதிகாரிக்கு, கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க  இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 கடந்த 2021 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட  குறித்த முறைப்பாட்டை மையப்படுத்தி, இதுவரை சி.ஐ.டி. விசாரணைகளின் முன்னேற்றத்தை மன்றுக்கு அறிவிக்க தவறியுள்ளதாக சட்டத்தரணிகள் சிலர் நேற்று கொழும்பு பிரதான நீதிவானுக்கு நகர்த்தல் பத்திரம் ஊடாக அறிவித்தனர்.

இந் நிலையிலேயே விடயத்தினை ஆராய்ந்து நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னதாக சி.ஐ.டி.யின்  மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  சுகத் அமரசிங்கவின் கீழ் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்   இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவானுக்கும் முதல் தகவல் அறிக்கை ( பீ அறிக்கை) 2021 மே 4 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 ஆரம்பகட்ட விசாரணைகளில், டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருந்து கொண்டு குடிவரவு குடியல்வு திணைக்களத்துக்கு போலியான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அதன்படி  தண்டனை சட்டக் கோவையின் 175 ஆவது அத்தியாயம் மற்றும் 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 (1) அ, உ பிரிவுகளின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அப்போது அறிவித்துள்ளனர். 

இந் நிலையில் அது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும்,  பிரித்தானிய உயரிஸ்தானிகராலயத்திலிருந்து சிறப்பு அறிக்கை ஒன்றினை கோரியுள்ள நிலையில் அவ்வறிக்கைக்காக காத்திருப்பதாகவும் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்திருந்தனர்.

டயானா கமகேவுக்கு எதிராக கடந்த 2020 நவம்பர் 2 ஆம் திகதி ஓஷல லக்மால் என்பவர் சி.ஐ.டி.யில் இந்த போலி கடவுச் சீட்டு தொடர்பில் முறையிட்டிருந்தார்.

 அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த சி.ஐ.டி.,  டயானா கமகே கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்ட 658534300V எனும் தேசிய அடையாள அட்டை,6553 எனும் இலக்கத்தை உடைய பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து என்.501386 எனும் சாதாரண கடவுச் சீட்டை 2014. ஜனவரி 24 ஆம் திகதி பெற்றுள்ளமையை கண்டறிந்துள்ளது.

 அத்துடன்  மேலும் பல ஆவணங்களை சமர்ப்பித்து ஓ.எல். 5654794 எனும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டினை கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி பெற்ருக்கொண்டுள்ளமையும்  தெரியவந்துள்ளது.

 இந் நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் சாமிக்க ராமவிக்ரமவிடம்  சி.ஐ.டி.யினர் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

 டயானா கமகே,  658534300 V எனும் அடையாள அட்டை, 6553 எனும் இலக்கத்தை கொண்ட பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்ததன் ஊடாக தனது வெளிநாட்டு குடியுரிமை தொடர்பிலான தகவல்களை மறைத்துள்ளதாக பிரதி கட்டுப்பாட்டாளட் சாமிக்க ராமவிக்ரம சி.ஐ.டி.யினரிடம் கூறியுள்ளார்.

அத்துடன் 1948 ஆம் ஆண்டின்  18 அம் இலக்க குடியுரிமை சட்டத்தின் பிரகாரம்,  வெளிநாட்டு குடியுரிமை ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் போது இலங்கை குடியுரிமை ரத்தாகும் எனவும் அவர் சி.ஐ.டி.யினரிடம் கூறியுள்ளார்.

 இந் நிலையில் சி.ஐ.டி.யினர்  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வீசா பிரிவு பிரதானி  ஜினானி குசுமாவேலிடமும் சாட்சியம் பதிவு செய்துள்ளனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட சாட்சிப் பதிவின் போது,  டயானா கமகே பிரித்தானிய பிரஜை எனும் ரீதியில்  2004 ஜனவரி 10 ஆம் திகதி முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுற்றுலா மற்றும் வதிவிட வீசாக்களுக்கு விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

 இறுதியாக  கடந்த 2014 ஆக்ஸ்ட் 27 ஆம் திகதி முதல் 2015 ஜூலை 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கான வதிவிட வீசாவை அவர் பெற்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் எந்த வீசா விண்ணப்பங்களையும் முன் வைக்கவில்லை எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வீசா பிரிவு பிரதானி  ஜினானி குசுமாவேல் குடிவரவு குடியகல்வு திணைக்கள தகவல் கட்டமைப்பை மையபப்டுத்தி சாட்சியமளித்துள்ளார்.

 இந் நிலையில் சி.ஐ.டி.யினர்  திம்பிரிகஸ்யாய மேலதிக மாவட்ட பதிவாளர்  மல்லவ ஆரச்சி ஜீவனி கருணாரத்னவிடமும் சாட்சியம் பெற்றுள்ளனர். 

இதன்போது டயானா கமகே சமர்ப்பித்துள்ள 6553 எனும்  பிறப்புச் சான்றிதழில், டயானா தெற்கு கொழும்பு வைத்தியசாலையில் பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தெற்கு கொழும்பு பிரிவு என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள திம்பிரிகஸ்யாய மேலதிக மாவட்ட பதிவாளர்  மல்லவ ஆரச்சி ஜீவனி கருணாரத்ன அவ்வாறானதொரு  பிரிவு கொழும்பில் இல்லை என தெரிவித்துள்ளதுடன், எனவே குறித்த பிறப்புச்ச் சான்றிதல் போலியானது என வாக்கு மூலம் அளித்துள்ளார்.

 இவ்வாறான நிலையிலேயே குறித்த விசாரணையின் முழுமையான அறிக்கையை நீதிமன்றில் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்பிக்க நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »