Our Feeds


Friday, October 21, 2022

ShortNews Admin

22க்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த | '22’ இற்கு ஆதரவாக சமல், நாமல் வாக்களிப்பு!



அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்கள் சகிதம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.


இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டன. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களித்த மொட்டு கட்சி எம்.பியான சரத் வீரசேகர, 22 இற்கு எதிராகவும் வாக்களித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச உட்பட 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக 179 பேர் வாக்களித்தனர். சரத் வீரசேகர எதிர்த்து வாக்களித்தார். திருத்தங்களை உள்வாங்கிய பின்னர் குழுநிலையின்போது (மூன்றாம் வாசிப்பு) ஆதரவாக 174 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் அறிவித்தார்.

குறித்த சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிடும் நாளில் இருந்து, அது அமுலுக்கு வரும். ’22’ ஆவது திருத்தச்சட்டமூலம் என விளிக்கப்பட்டிருந்தாலும் அரசியலமைப்பிற்குள் 21 ஆவது திருத்தச்சட்டமாக உள்வாங்கப்படும்.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் ஏற்பாடு 19 இல் இருந்த நிலையில், 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அது இல்லாமல் செய்யப்பட்டது. எனினும், 22 ஆவது திருத்தச்சட்டத்துக்குள் அந்த சரத்து மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதற்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இரட்டை குடியுரிமை உடைய பஸில் ராஜபக்சவை இலக்கு வைத்த நகர்வே இதுவெனவும் கூறப்பட்டது. எனினும், அந்த சரத்து நீக்கப்படவில்லை.

ஆனால் பஸிலின் சகாக்களான சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரோஹித, சஞ்சீவ எதிரிமான்ன , பிரசன்ன ரணதுங்க, பவித்ரா உள்ளிட்ட எம்.பிக்கள் இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மஹிந்த வராவிட்டாலும் சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான நாளில் இருந்து நான்கரை வருடங்களுக்கு பிறகே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற ஏற்பாடு 19 இல் உள்வாங்கப்பட்டது. அந்த கால எல்லை ’20’ இல் இரண்டரை வருடமாக்கப்பட்டது. ’22’ இலும் இரண்டரை வருடம் என்ற ஏற்பாடு உள்ளது.

(தற்போதைய ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் 2023 மார்ச்சில் கிட்டுகின்றது)

அரச சேவையில், அரசியல் தலையீடுகளை தவிர்த்து, சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பிரதான நோக்கில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவை, ’20’ ஊடாக நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக நாடாளுமன்ற பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. எனினும், 22 ஊடாக அரசியலமைப்பு பேரவை மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது. சிவில் பிரதிநிதிகள் இடம்பெறும். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை மேற்படி பேரவையே ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்.

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சை மட்டும் வகிப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் நியமனம்கூட அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே இடம்பெறவேண்டும்.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் இருக்க வேண்டும் என்ற ஏற்பாடு ’19’ இல் இருந்தது. ’20’ இலும் அந்த ஏற்பாடு காக்கப்பட்டது. நிறைவேற்றப்பட்ட ’22’ இலும் அது தொடர்கின்றது.

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். இழுத்தடிப்பு செய்த மொட்டு கட்சிகளுடன் பல சுற்று பேச்சுகளை நடத்தினார். இது விடயத்தில் விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக முக்கிய பங்கை வகித்தார்.

ஆர்.சனத்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »