அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 183 இலங்கையர்கள் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலியாவின் கடல் எல்லை கட்டளைப் பணியகத்தின் தளபதியும், கூட்டு துரித முகவரக படையின் தளபதியுமான ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய கரையோர பாதுகாப்பு முகவரகங்களின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மீன்பிடி படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைய முற்பட்டவர்கள் என ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்தார்.
‘இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை சென்றடைய சுமார் 21 நாட்கள் செல்லும், அவுஸ்திரேலியாவை சென்றடைய முற்படும் ஆட்கடத்தல் படகுகள் எதனையும் நாம் நிறுத்தி, அதில் உள்ளவர்களை அவர்களின் நாட்டுக்கு அல்லது அவர்கள் புறப்பட்ட நாட்டுக்கு அனுப்புவோம். தேவைப்பட்டால் பிராந்திய பரிசீலனை நாட்டுக்கு அனுப்புவோம்’ என அவர் கூறியுள்ளார்.