Our Feeds


Thursday, October 27, 2022

SHAHNI RAMEES

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 எம்.பிகளில் எவருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இல்லை: சுமந்திரன் தெரிவிப்பு..!

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லர் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முன்வந்து, அது தொடர்பில் யாராவது ஆட்சேபத்தை தெரிவித்தால் அவரது பெயரை நிராகரிக்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை. ஏனெனில் அவ்வாறான ஆட்சேபனைகளை விசாரித்து உண்மைகளை கண்டறிய அவர்களுக்கு கால அவகாசம் போதாது.

அதன் பிறகு அவர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தின் ஊடாக அதனை கேள்விக்குட்படுத்தி அவரது பதவியை பறிக்க முடியும். கீதா குமாரசிங்கவின் விடயத்திலும் இதுவே நடந்தது.

இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதில் நாங்கள் ஆராய்ந்து இருக்கின்றோம். தேர்தலில் வேட்பாளரொருவர் போட்டியிடும் போது, தேர்தல் ஆணைக்குழு அவரிடமிருந்து ஒரு சத்திய கடதாசியை பெற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாம்.

அதன் பின்னர் குறித்த வேட்பாளரது பிரஜாவுரிமை தொடர்பில் நீதிமன்றத்தில் யாராவது கேள்விக்குட்படுத்தினால், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக பொய் சாட்சி சொன்ன குற்றத்துக்காக அவருக்கு தண்டனையையும் விதிக்க முடியும்.

இவ்வாறான ஏற்பாடு கொண்டுவரப்பட்டால் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பலரும் தேர்தலில் போட்டியிட பின்னடிப்பார்கள்.

புதிய திருத்தத்தின்படி இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தால், அவர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கான தகுதியை இழப்பார்கள்.

இரட்டை பிரஜாவுரிமை உள்ள பலர் தற்போதைய நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி எமக்கு கிட்டியுள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து அவர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »