(எம்.மனோசித்ரா)
மக்களின் எழுச்சிக்கு அஞ்சி அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்து, அவற்றில் ஒழிந்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. யுத்த சூழல் எதுவுமின்றி, நாடு அமைதியாகவுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன?
இதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முழுமையான சர்வாதிகாரம் வெளிப்படுத்தப்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் , யுவதிகள் 84 பேர் எவ்வித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனநாயக நாடொன்றில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான சர்வாதிகாரியாக செயற்படுகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.