எகிப்தில் நடைபெறவுள்ள COP 27 மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை தீர்மானித்திருப்பதால்,இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக வழிநடாத்தல் குழுவொன்று நியமிக்கப் பட்டுள்ளது.
சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் நேற்று (26) நடந்த கூட்டத்திலே இந்த வழிநடாத்தல் குழு நியமிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சுற்றாட ல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாஸிங்க, இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாராஹல்டன், யு,என்,டி,பி யின் பிரதி வசிப்பிடப் பிரதிநிதி கிரிஸ்டி யன்ஸ்கூங், இலங்கைக்கான எகிப்து தூதுவர் மேஜட்மொஷ்லி மற்றும் யுனிசெபின் இலங்கை பிரதிநிதி மெலின் ஹெர்விங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்த தாவது ;
எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை தீர்மானித்துள்ளது. ஐ,நா காலநிலைக் கொள்கைக்கேற்ப நடைபெறும் இம்மாநாடு நவம்பர் 07 முதல் 18 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வழிநடாத்தல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், சமூகத்தின் பல்துறைசார் பிரதிநிதிகள், தனியார் துறையினர், இளைஞர்கள்,
சூழலியாலர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். பசுமைப் புரட்சியில் இலங்கைக்கு பழுத்த அனுபவங்கள் உண்டு. தாவரங்களை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கு இலங்கையின் ஆசீர்வாதம் உள்ளது. இந்நியதிகளின் நிலைப்பாட்டிலேயே, இம்மாநாட்டில் இலங்கை பங்கேற்கிறது.
மேலும், இம்மாநாடு குறித்த விழிப்புணர்வுகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். அத்துடன் காலநிலை மாற்ற சவால்களை வெற்றி கொள்ளவும் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் முடியுமென இலங்கை நம்புவதாக அவர் தெரிவித்தார்.
எகிப்தில் நடைபெறும் இக்காலநிலை மாநாடு குறித்து எகிப்து தூதுவர் தெரிவித்ததாவது,
பல்துறை சார்ந்தோரை உள்வாங்கி, இதுபோன்ற பல மாநாடுகளை நடாத்துவதற்கு எகிப்து தயாராகவுள்ளது. காலநிலையை சவாலுக்குட்படுத்தும் சூறாவளி, பஞ்சம் மற்றும் வெள்ளம் என்பவற்றி லிருந்து பாதுகாக்கும் வினைத்திறன் உள்ள வியூகங்களை உள்வாங்குவதற்கு இம்மாநாட்டுடன் இணைந்த தழுவல்குழு தயாருடன் உள்ளது. பரிஸ் காலநிலை கொள்கையின் தீர்மானங்களை ஊக்குவிக்கும் சகல செயற்பாடுகளை உள்வாங்க எகிப்து தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.