Our Feeds


Wednesday, September 28, 2022

Anonymous

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா - PFI மற்றும் அதன் 8 துணை நிறுவனங்கள் அதன் சமூக ஊடகங்களை முடக்கி தடை செய்தது இந்திய அரசு!



பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதன் எட்டு துணை நிறுவனங்களின் வலைதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களைத் தூண்டிவருவதாகக் குற்றம்சாட்டி, அதைத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்திவந்தன. இந்த நிலையில், நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், அவற்றுக்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்திருக்கிறது. சட்டவிரோதப் பணிக்கான பணப் பரிவர்த்தனை, பிரதமர் மோடியைக் கொல்ல சதி எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பின்மீது என்.ஐ.ஏ சுமத்தியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் எட்டு துணை நிறுவனங்களின் வலைதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட எட்டு அமைப்புகளின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள், யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளக் கணக்குகளுக்கும், அதன் உள்ளடக்கத்துக்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் பி.எஃப்.ஐ., சி.எஃப்.ஐ., ஆர்.ஐ.எஃப் மற்றும் பிற துணை நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும், தேசவிரோதச் செயல்கள் ஏதேனும் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பி.எஃப்.ஐ அல்லது அதன் துணை நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளுக்காக ஏதேனும் ப்ராக்ஸி சமூக ஊடக கணக்குகள் அல்லது வலைதளங்களைத் திறந்தால், அவையும் தடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நன்றி: ஆனந்த விகடன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »