Our Feeds


Friday, September 23, 2022

Anonymous

கே.பி. வசமிருந்த புலிகளின் கப்பல்கள், தங்கம் எல்லாம் எங்கே? - JVP கேள்வி.



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது – என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவருமான நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.


கொத்மலை தேர்தல் தொகுதியில், தேசிய மக்கள் சக்திக்கான தொகுதி சபை அமைக்கும் நிகழ்வு கொத்மலை பகுதியில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,


”அர்ஜுன மகேந்திரன் என்பவர், சாதாரண அரச அதிகாரி. அவர் நாட்டை விட்டு தப்பியோடினார். கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், புலிகள் அமைப்பில் பலம்பொருந்திய தலைவராக இருந்தார். பிரபாகரனுக்கு அடுத்தப்படியாக அவரே தலைவர்.


இப்படிபட்ட கே.பி. உலக நாடுகளை சுற்றி வலம் வருகையில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார். கே.பியை இவ்வாறு அழைத்துவர முடியுமென்றால், அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்ய முடியாமல் உள்ளது? மகேந்திரன், ரணிலின் நண்பர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.


அதேபோல கே.பியின் கட்டளையை ஏற்று செயற்பட்ட இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். கேபியோ வெளியில் சுகபோகம் அனுபவிக்கின்றார்.


கே.பியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கப்பல்கள், பணம், தங்கத்துக்கு என்ன நடந்தது, மர்மமாகவே உள்ளது. எமது ஆட்சியில் இவை குறித்து விசாரணை நடத்தப்படும்.


அதேவேளை, உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கையில், விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. இவ்வாறு குறைந்த விலையில் நெல்லை வாங்கிவிட்டு, அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகின்றது.” – என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »