Our Feeds


Friday, September 23, 2022

Anonymous

ஹிஜாப் அணிய வலியுறுத்தியதால் ஈரானிய ஜனாதிபதியுடனான நேர்காணலை ரத்துச் செய்தது CNN



ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை நேர்காணல் செய்வதற்குச் சென்ற சி.என்.என் தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளர் கிறிஸ்டியன் ஆமன்போர், ஹிஜாப் அணிய வேண்டும் என ஜனாதிபதி ரைசி வலியுறுத்தியதால் மேற்படி நேர்காணலை சி.என்.என். கைவிட்டுள்ளது.


ஈரானில் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர், பொலிஸ் காவலில் இருக்கும்போது மரணமடைந்தமை ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் பல்வேறு நகரங்களில் இம்மரணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது ஏற்பட்ட மோதல்களில் பாதுகாப்பு படையினர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்துக்காக நியூயோர்க்குக்கு சென்ற ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை சி.என்.என். தொலைக்காட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைமை ஊடகவியலாளர் கிறிஸ்டியன் ஆமன்போர் நேற்று முன்தினம் புதன்கிழமை நேர்காணல் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ரைசியை நேர்காணல் செய்வதற்கு ஊடகவியலாளர் கிறிஸ்டியன் ஆமன்போர் காத்திருந்தார். அப்போது, அவர் தலையை மறைக்கும் வகையில் ஆடை அணிந்துகொள்ள வேண்டும் என ஈரானிய ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவர் கோரியதாகவும் அதற்கு தான் மறுத்துவிட்டதாகவும் ஆமன்போர் தெரிவித்துள்ளார்.

‘நான் பண்பாக மறுத்துவிட்டேன். தலையை மறைக்கும் ஆடை தொடர்பான சட்டம் அல்லது பாரம்பரியம் எதுவும் இல்லாத நியூயோர்க்கில் நாம் இருக்கிறோம்’ என கிறிஸ்டியன் ஆமன்போர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஜனாதிபதியுடனான நேர்காணலுக்கு காத்திருந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

64 வயதான கிறிஸ்டியன் ஆமன்போர் (Christiane Amanpour)  பிரிட்டனில் பிறந்தவர். அவரின் தந்தை ஓர் ஈரானியர். 11 வயது வரை ஈரானின் தெஹ்ரான் நகரில் கிறிஸ்டியன் ஆமன்மோர் வசித்தமை குறிப்பிடத்தக்கது.

‘கடந்த காலத்தில் ஈரானிய ஜனாதிபதிகளை ஈரானுக்கு வெளியே தான் நேர்காணல் செய்தபோது, தலையை மறைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன். முன்னெப்போதும் இல்லாத, எதிர்பாராத இந்த நிபந்தனைக்கு இணங்க முடியாது என நான் கூறிவிட்டேன்’ எனவும் கிறிஸ்டியன் ஆமன்போர் தெரிவித்துள்ளார்.

ஈரானிலுள்ள தற்போதைய சூழ்நிலை காரணமாக, தலையை மறைக்கும் ஆடை அணியுமாறு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உதவியாளர் ஒருவர் கூறியதாகவும் கிறிஸ்டியன் ஆமன்போர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »