Our Feeds


Tuesday, September 27, 2022

ShortNews Admin

CCTV VIDEO: கொள்ளை சம்பவத்தை உயிரை பணயம் வைத்து தடுத்த பொலிஸ் அதிகாரி - நடந்தது என்ன?



பணக் கொள்ளையைத் தடுப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து நடவடிக்கை எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த செய்தி தம்புத்தேகமவில் இருந்து பதிவாகியுள்ளது.


நேற்று பிற்பகல் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக சுமார் 22.3 மில்லியன் ரூபாவை கொண்டு வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகமூடி அணிந்த இருவர் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது வர்த்தகரின் கையில் இருந்த இரண்டு பணப் பைகளை எடுத்துக்கொண்டு ஓட முற்பட்ட போது, ​​அந்த இடத்திற்கு அருகில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் இதனைக் கண்டுள்ளார்.

தம்புத்தேகம பொலிஸில் பணிபுரியும் சார்ஜன்ட் D.A.C புத்திக குமார, உடனடியாகச் செயற்பட்டு சந்தேக நபர்கள் இருவருக்கு முன்னால் பாய்ந்து, அவர்களின் வழியைத் தடுத்தார்.

எதிர்பாராமல் எதிரே வந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து தப்பிக்க சந்தேகநபர்கள் குறித்த அதிகாரியை மிளகாய் பொடியால் தாக்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை செயற்படுத்திய போதும் அது செயற்படவில்லை என சார்ஜன்ட் புத்திக குமார எம்மிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்களில் ஒருவர், வர்த்தகர் பணத்தை வைப்பிலிட வருகை தந்த வங்கியின் தனியார் பாதுகாப்பு அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »