காணாமல் போன கணவருக்காக சளைக்காமல் போராடியதற்காக சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், இலங்கை குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்காத நாடு என சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்துள்ளார்.
“இன்று நீங்கள் காணும் எனது மொட்டையடிக்கப்பட்ட தலை மற்றும் கறுப்பு ஆடைகள், நான் குற்றவியல் சக்திகளுக்கு தண்டனை கிடைக்காத, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன்.” என்ற செய்தியை உங்களுக்கு வழங்குகிறது.
பன்னிரெண்டு வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வரும் சந்தியா எக்னலிகொட, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றும் போதே சிங்கள மொழியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவுக்கு நீதி கிடைக்க ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் முடிவில்லாத போரில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும், வடக்கில் தாய்மார்களின் முடிவற்ற போராட்டம் குறித்து குரல் எழுப்பியதாகவும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.
“என்னைப் போன்று காணாமல் போன தமது உறவுகளை தேடி வரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் தாய்மார்கள் நாடு பூராகவும் உள்ளனர். வடக்கில் தமிழ் தாய்மார்கள் போராடி வருகின்றனர். என்னைப் போலவே, அவர்களும் பொலிஸ் போன்ற பல அரசு நிறுவனங்களுடன் மோதுகிறார்கள், ”என சந்தியா வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா குழுவின் 23ஆவது அமர்வில் உரையாற்றும் போது கூறினார்.
கடந்த நான்கு தசாப்தங்களில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், எந்தவொரு ஆணைக்குழுவும் காணாமல் போனவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ நீதி வழங்கவில்லை என்பதை அவர் சர்வதேச சமூகத்திற்கு நினைவுபடுத்தினார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான சந்தியா எக்னெலிகொட, பாதிக்கப்பட்டவர்கள் உண்மையையும் நீதியையும் அடைய நம்பக்கூடிய ஒரு சட்டப் பொறிமுறையைப் பெறுவதற்கு ஐ.நா தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டார்.
2017 ஆம் ஆண்டில், இலங்கையில் நடந்த போரிலும் முந்தைய கிளர்ச்சிகளிலும் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களின் உறவினர்களின் அடையாளமாக மாறிய ஒரு பெண்ணாக சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்காவின் சர்வதேச தைரியத்திற்கான விருதை அளித்தது.
காணாமல் போன தமது கணவர் பிரகித் எக்னலிகொட குறித்த உண்மையை வெளிக்கொண்டுவர, அதிகாரிகளின் தடைகளையும் மீறி எண்பது தடவைகளுக்கு மேல் நீதிமன்றம் சென்று சந்தியா காட்டிய தைரியமே அவருக்கு இந்த விருது கிடைத்தமைக்கு காரணம் என அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் ஏ ஷெனொன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது