அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பல பிரதேசங்களை பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என, டெய்லி நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதி உயர்பாதுகாப்பு வலயங்கள் – வர்த்தகங்களுக்கு பாதகங்களை ஏற்படுத்துவதாக சில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியமையினை அடுத்டு, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுக்கான தனது இரட்டைப் பயணங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
கொழும்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் இது செயல்படுத்தப்படும்.
பாதுகாப்பு நிபுணர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார்.
இது இவ்வாறிருக்க, அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக சில பகுதிகளை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியமை – சட்ட விரோதமானது என, பல்வேறு தரப்புகளிலிருந்தும் குரல்கள் எழுந்த வண்ணமுள்ளன.
இதேவேளை, அதி உயர் பாதுகாப்பு வலயமாக சில பகுதிகளைப் பிரகடனப்படுத்தியமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளும் தாக்கல் செய்யபப்பட்டுள்ளன.