“லிலிபட்” என செல்லமாக அழைக்கப்பட்ட எலிசபெத் மகாராணியார் மறைந்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை பிரித்தானிய அரச குடும்பத்துக்கும், மக்களுக்கும், அரசுக்கும் தெரிவித்து கொள்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி விடுத்துள்ள செய்தியில் மேலும் கூறியதாவது,
எமது ஞாபகத்தில் எலிசபெத் மகாராணியார் பிரிட்டிஷ் முடியாட்சியின் சின்னம். முடியாட்சி என்பது காலனியாதிக்கமாகி எம்மை ஆண்டது. அது அன்றைய யுகம். இன்று ஜனநாயக யுகம். இரண்டிலும் வாழ்ந்து பெருமை பெற்ற ஒரே பிரித்தானிய அரசி “லிலிபட்” என செல்லமாக அழைக்கப்பட்ட எலிசபெத் மகாராணியார் ஆவார்.
போர்த்துகேயர், ஒல்லாந்தர் ஆகியோர், இலங்கை தீவின் பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்து இருந்தாலும், முழு இலங்கை தீவையும் கைப்பற்றி ஒரே நாடாக்கியது, பிரிட்டிஷ் முடியாட்சிதான். அதன்படி அதுவரையில் வடக்கில் இருந்த தமிழரசாட்சி நாட்டையும் இணைத்து, ஈழத்தமிழர் இறைமையையும் இலங்கை என்ற ஒரே நாட்டு வரையறைக்குள் 1833ம் வருடம் கொண்டு வந்ததும் பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
அதேபோல் 1823ம் வருடம் முதல், இந்திய வம்சாவளி மலையக தமிழரை தமிழகத்து தென் மாவட்டங்களிலிருந்து, இலங்கைக்கு கொண்டு வந்து, வளம் கொழிக்கும் பெருந்தோட்டங்களை அமைத்து, இலங்கையை செல்வம் கொழிக்கும் தேயிலை ஏற்றுமதி நாடாக்கியதும் பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
அதன் முன்னரே இலங்கை வந்து ஆண்ட, இலங்கை தீவின் அதிகாரபூர்வ கடைசி மன்னனான இந்திய வம்சாவளி நாயக்க தமிழன் ராஜசிங்கனை 1815ல், தோற்கடித்ததும், பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
செல்வம் கொழிக்கும் தேயிலை ஏற்றுமதி நாடாக இலங்கை மாறியதால், அதற்கு அவசியமான வீதி, ரயில் சாலை, துறைமுகம், நகர அமைப்பு, அரச பணி சேவை ஆகிய உள்நாட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்தியதும் பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
இத்தகைய பற்பல வரலாற்று நடப்புகளுக்கு அதிகாரபூர்வ தலைமை பொறுப்பு கொண்ட எலிசபெத் மகாராணியார், 1823, 1833 வருடங்களில் நடந்த நிகழ்வுகளால் இலங்கையில் இன்றுவரை தீர்க்கப்படாமல் கொழுந்து விட்டு எரியும் தீ அணையுமுன் மறைந்து விட்டாரே என தோன்றுகிறது. ஒப்பீட்டு வயதில் குறைந்தவரான புதிய பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ், இலங்கை விவகாரங்களில் பிரித்தானியாவுக்கு இருக்கின்ற தார்மீக பொறுப்புகளை நிறைவேற்ற அக்கறை கொள்வார் என நம்புவோம்.