கடந்த 2019 ஏப்ரல் 21ம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து விட்டு, இப்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சான்றுகளை சேகரிக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் எப்படி நிராகரிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள சூழலில், நாளுக்கு நாள் பொருட்களின் விலை மிக வேகமாக உயர்வடையும் நிலையில், நாடு வெளிநாட்டு உதவிகளிலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது. அவ்வாறான பின்னணியில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் மிக்க கரிசனையுடன் கவனம் செலுத்த வேண்டும்.
அசோசியேட்டட் பிரஸ் செய்திகளின் பிரகாரம், கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி “வெளிநாட்டு பொறிமுறை, வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை, நாட்டிற்கு வெளியே குடிமக்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தல், கலப்பு நீதிமன்ற முறைமை ஊடாக நீதிபதிகளை வரவழைத்து வழக்குகளை விசாரித்தல் போன்றவை அனைத்தும் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது. எனவே நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
‘இலங்கைப் பிரஜைகள் மீது நாட்டிற்கு வெளியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை ஏற்க மாட்டோம்” மற்றும் ‘வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்ற வெளிவிவகார அமைச்சரின் கூற்றை நாம் வரவேற்கிறோம்.
எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில், உரிய நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி, வெளிநாட்டு நிறுவனங்களை சுதந்திரமாக விசாரணை செய்ய அனுமதித்துள்ளனர். அவ்வாறான நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அரசாங்க தூதுக் குழு, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை இப்போது எப்படி மறுக்க முடியும்? இதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
எந்தவொரு வெளிநாட்டு விசாரணையாளருக்கும், எந்தவொரு நீதிவானாலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்புகள் நடந்த இடங்களை பார்வை இடவோ, இலங்கை விசாரணையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவோ அல்லது விசாரணை குழுவின் அங்கத்தவர்களாக இருக்கவோ அனுமதியளிக்கப்படவில்லை. இதனை ஒரு கௌரவ சட்டத்தரணியாக அலி சப்றி உறுதியாக அறிந்திருப்பார்.
இதே நேரம் பொலிசார் அல்லாத, நன்கு அறியப்பட்ட உள்ளுரர்வாசிகள் சிலரும் எந்த நீதிமன்ற அனுமதியும் இன்றி, குற்றம் நடந்த பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் அவர்களுக்கு சாட்சியாளர்களுடன் கதைக்கவும் சந்தர்ப்பமளிக்கப்பட்டது. இதனால் அந்த விசாரணைகள் மாசுபட்டன.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ‘வெளிநாட்டு விசாரணை பொறிமுறையை ‘நாட்டுக்குள் அனுமதித்தவர்கள், வெளிநாட்டு நீதிபதிகள் இங்கு வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என பின்னர் வாதிடுவதற்கு தேவையான அடித்தளத்தை இட்டுள்ளதாக நான் அன்று ஊடக அறிக்கை ஊடாக வெளிப்படுத்தியிருந்தேன்.
பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடந்த 2021 மே 19 ஆம் திகதி, அமெரிக்க பெடரல் பொலிஸாரும் (FBI) அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரும் (AFP) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து சி.ஐ.டி.யினருடன் இணைந்து விசாரணைகளை நடத்தி வருவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவையும், இவற்றை ஒத்த ஏனைய நிறுவங்களும், மனித உரிமை மீறல்கள் குறித்து சான்றுகளை சேகரிக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு சமமன்று.
கடந்த 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு முன்னர், அத்தாக்குதலை ஊக்குவித்த காரணிகளில் ஒன்றாக மூன்றாம் உலக நாடுகளின் மீதான அந்நிய படையெடுப்பை தற்கொலை குண்டுதாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு காரணிகள், குறிப்பாக போலியான விடயங்களை மையப்படுத்தி கடந்த 40 வருடங்களாக மத்திய கிழக்கு மற்றும் பிராந்திய நாடுகள் பலவற்றை ஆக்கிரமித்த நடவடிக்கைகளில் அமெரிக்க மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (US Federal intelligence and security agency) தொடர்பு பட்டது. அப்படியான ஒரு நிறுவனத்துக்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணையில் தலையீடு செய்ய இடமளித்ததன் ஊடாக இலங்கை விசாரணையாளர்களுக்கு, விசாரணைகளின் நம்பகத் தன்மை மற்றும் பக்கச் சார்பற்ற நிலைமை தொடர்பில் நீதிமன்றில் உரிமை கோர முடியுமா?
கடந்த 2021 ஒக்டோபர் மாதம், இங்கிலாந்தின் எசக்ஸ் பிராந்தியத்தில் (Essex) வைத்து, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமேர்ஸ் (Sir David Amess)பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கத்தோலிக்க மத பற்றாளர் என்ற ரீதியில், உடனடியாக செய்ய வேண்டிய சில எளிமையான மத சடங்குகளை செய்ய அப்போது அருட் தந்தை ஜெப்ரி வூல்னப் (Father Jeffrey Woolnough) முற்பட்ட போதும் அதற்கு எசக்ஸ் பொலிஸார் அனுமதிக்கவில்லை. குற்றம் நடந்த இடத்தின் நிலையை மாறாது பாதுகாப்பது எந்தவொரு விசாரணையினதும் அடிப்படை அம்சம் என கூறி எசக்ஸ் பொலிஸார் குறித்த அனுமதியை வழங்க மறுத்திருந்தனர்.
“உலகின் கொடூரமான பயங்கரவாத குண்டுத் தாக்குதலாக கருதப்படும் Pan Am 103 சம்பவத்துக்கு காரணமானவர்களின் உண்மையான அடையாளங்களை மறைக்க அமெரிக்கா, பெரிய பிரித்தானியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியன இணைந்து சதி செய்தன” என அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் சி சேசி (William C Chasey)1995 ஆம் ஆண்டு தான் எழுதிய புத்தகமான ‘Pan Am 103-The Lockerbie Cover Up’ 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி, நடு வானில் விமானத்தில் நடந்த வெடிப்பு அது. ஸ்கொட்லாந்தின் – லொக்கர்பியில் 31 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் வெடித்து சிதறியதில் 271 பேர் கொல்லப்பட்டனர்.
யார் அதனை செய்தார்கள் என்ற உண்மை கதையை மாற்ற எப்.பி.ஐ. யும் சி.ஐ.ஏ.யும் எப்படி செயற்பட்டனர் என்பதை சேசி தனது நூலில் குறிப்பிடுகின்றார். உண்மையான சுத்திரதாரிகள் இருக்க, லிபியாவின் முஅம்மர் கடாபியை சிக்கவைப்பதற்காக குற்றம் நடந்த இடம் எப்படி மாசுபடுத்தப்பட்டது என்பதை சேசி தனது நூலில் விளக்குகின்றார்.
தற்போதைய நாட்டின் நிலைமையின் அடிப்படையில், நாட்டின் 22 மில்லியன் மக்களும் சர்வதேச நாணய நிதியத்தின் கசப்பான நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அமைச்சர் அலி சப்ரியும் இணை பிரதிநிதியான நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு முகம் கொடுக்க ஒத்துழைப்புடன் செயற்படக் கூடிய அதனை ஒத்த முறைமை ஒன்றினையா கண்டுபிடிப்பார்கள்?- Vidivelli