Our Feeds


Friday, September 2, 2022

Anonymous

VIDEO: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலை இந்தியாவுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி



முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த்  (INS Vikrant) கப்பலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியாவுக்கு அர்ப்பணித்தார்.


முற்றிலும் உள்நாட்டில் விமானம் தாங்கி போர்கப்பல் தயாரித்த அமெரிக்கா, ரஷ்யா, பிரட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.

இக்கப்பல் 262 மீற்றர் நீளத்தையும் 62 மீற்றர் அகலத்தையும் கொண்டது. இதன் உயரம் 59 மீற்றர்களாகும். இந்தியாவில் நிர்மாணிக்ப்பட்ட மிகப் பெரிய கப்பல் இது.

இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.

இந்திய கடற்படையில் 1961 முதல் 1997 வரை சேவையிலிருந்த இந்தியாவின் முதலாவது போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தின் நினைவாக இப்புதிய கப்பலுக்கும் ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது. முந்தைய ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும்.

20 ஆயிரம் கோடி இந்திய ரூபா செலவில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை பி.எச்.இ.எல். மற்றும் எல்.என்.டி. உள்ளிட்ட சுமார் 500 இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளன.

45 ஆயிரம் தொன் எடையை தாங்கும் இப்போர்க்கப்பல், 7,500 கடல் மைல்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டதுஅதிகபட்ச வேகம் 28 நொட் ஆகும்.

15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன. அதில் பெண் அதிகாரிகளுக்கு என்று தனித்தனி கேபின்கள் உள்ளன.

30 விமானப்படை விமானங்களுடன் இவ்விமானம் தாங்கி கப்பல் பயணிக்க முடியும். இந்த கப்பலில் இருந்து மிக் 29 கே போர்விமானங்கள், கமோவ் 31 ஹெலிகாப்டர்கள், எம்.எச்.-60, ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும், தரையிறக்கவும் முடியும்.

1,700 படையினர் பயணிக்கக்கூடியஇந்த கப்பலில் 2 சத்திரசிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை நிலையங்கள், சி.டி.ஸ்கேன் வசதி ஆகியனவும் உள்ளன.

ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இந்த கப்பலுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர், கடந்த ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியாவுக்கு அர்ப்பணித்தார்.

இக்கப்பலில் விமானங்கள் தரையிறங்கும் சோதனைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »