ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி திருமதி அயோமா ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
கொலன்னாவ, சாலமுல்ல, லக்சட செவன பகுதியைச் சேர்ந்த கணேசன் ஜெகன் என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.கே. சேனாரத்ன நீதிமன்றில் அறிவித்தார்.
தாம் வேறு ஒருவரிடம் 4 இலட்சம் ரூபாவை பெற்றதாகவும், குறித்த நபரின் தொலைபேசி இலக்கமென நினைத்து இந்த அழைப்பை மேற்கொண்டதாகவும் சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் இந்த வாக்குமூலங்கள் முரண்பாடானதாக இருப்பதால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.