முல்லேரியா பிரதேசத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் துப்பாக்கிகளுடன் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்குமைவாக முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்பொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தபோது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கடுவெல மற்றும் ஹிம்புடான பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சந்தேக நபர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு பேலியகொட பிரதேசத்தில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டமை, 2020 ஆம் ஆண்டு பொலிஸாரினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, 2014 ஆம் ஆண்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பிரசசார கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டமை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.