கொவிட் தொற்று மற்றும் உக்ரேன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதகமான விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகள் அதிகரித்து, பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய அரசியல் போக்குகள் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இன்று (29) காலை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தின் பிரதான அமர்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் ஆர்.மார்கஸ் ( ஜூனியர்) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க அவர்கள் மேலும் தெரிவிக்கையில், உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சியை குறைத்துள்ளதுடன், இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் வசிக்கும் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், நாட்டின் கடன் நிலைத்தன்மையை மீளமைப்பதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் கடனை நிலைநிறுத்துவதற்கான இந்த முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆழமான மற்றும் அழுத்தமான மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் அதேவேளை சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படக் கூடிய தரப்பினர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப சமூகப் பாதுகாப்பிற்கு அதிக நிதி மற்றும் வளங்களை ஒதுக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.
எமது பொருளாதாரத்தை இன்று நாம் ஸ்திரப்படுத்தியுள்ளோம். நாம் எவ்வாறு இந்த நெருக்கடியை தீர்க்கிறோம் என்பதை பல நாடுகளைப் போலவே பங்குதாரர்களும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.’’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, பிலிப்பைன்ஸிற்கான இலங்கை தூதுவர் ஷோபினி குணசேகர மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மதிய விருந்து வழங்கினார். இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.