எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர், எந்தவொரு நேரத்திலும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அதிகளவிலான சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பாராளுமன்றத்தை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி வசம் காணப்படுகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமை காரணமாக, பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பாராளுமன்ற ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னர், பாராளுமன்றத் தேர்தலை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
பாராளுமன்ற ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னர், பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டாம் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை என அறிய முடிகின்றது.
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் கூட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இதனை பிரதான கோரிக்கையாக முன்வைத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 69 லட்சம் வாக்குகளின் பிரதிநிதித்துவம் முறையாக செயற்படாமையினால், உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் என பலரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலைமையை முறையாக கையாள்வதற்கு, எதிர்வரும் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் காணப்படுவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.