தம்புத்தேகம தனியார் வங்கி கொள்ளை சம்பவத்துடன்
தொடர்புடையவர் சந்தேகிக்கப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.ஊழல், மோசடி போன்றன ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.கட்சியின் கொள்கைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தம்புத்தேகம தனியார் வங்கி கொள்ளைச் சம்பவத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் தொடர்புடையதாக ஊடகங்களில் வெளியான செய்தியை தொடர்ந்து கட்சி மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளோம்.
இச்சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வ அறிக்கையை கோரியுள்ளோம். இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அவரை பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவோம் என்றார்.