(எம்.மனோசித்ரா)
கொழும்பு மாவட்டத்தில் சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நாடாளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம், உயர் நீதிமன்ற வளாகம், மேல் நீதிமன்ற வளாகம் , கொழும்பு நீதிவான் நீதிமன்றம் , சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம் , ஜனாதிபதி செயலகம் , ஜனாதிபதி மாளிகை , கடற்படை தலைமையகம் , பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதிகள், அகுரகொட பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகம் , விமானப்படை தலைமையகம் , பிரதமர் அலுவலகம் , அலரி மாளிகை , பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத்தளபதிகளின் வீடுகள் அமைந்துள்ள பிரதேசங்கள் என்பன அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள இந்த கட்டளையை செயற்படுத்தும் அதிகாரியாக பாதுகாப்பு செயலாளர் செயற்படுவார்.
அதற்கமைய எந்தவொரு விசேட சந்தர்ப்பத்திலும் அல்லது தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகளுக்கமைய , குறித்த அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் ஏதேனும் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய தகுது வாய்ந்த அதிகாரியால் ஏற்பாடுகள் மேற்கொள்ள முடியும். குறித்த அதிகாரியால் கட்டளைகளை முறையாக செயற்படுத்துவதற்காக காலத்துக்கு காலம் தேவைப்படக் கூடிய கட்டளைகளைப் பிறப்பிக்க முடியும். இவ்வாறு கட்டளைகள் பிறப்பிக்கப்படும் போது அதற்கு இணங்க செயற்பட வேண்டியது அனைவரதும் கடமையாகும் என்று வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் அல்லது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் எழுத்து மூலமான முன் அனுமதியைப் பெறாமல் எந்தவொரு நபராலும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஏதேனும் சாலையில் , மைதானத்தில் , கடற்கரையில் அல்லது வேறு திறந்த இடத்தில் எந்தவொரு வகையான ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டத்தை நடத்தக் கூடாது என்றும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உரிய அதிகாரியின் அனுமதியின்றி தற்காலி அல்லது நிரந்தர கட்டுமானங்களையோ , அகழ்வுகளையோ முன்னெடுக்க முடியாது என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.