Our Feeds


Tuesday, September 6, 2022

SHAHNI RAMEES

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு..!

 இந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்த அதேவேளை, தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இறக்குமதிச் செலவினம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


மத்திய வங்கியினால் இன்று (06) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஜூலை மாதத்தில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, வெளிநாட்டுச் செலாவணி அழுத்தங்களுக்கு மத்தியில் வங்கித் தொழில் முறைமையில் காணப்பட்ட செயற்பாடுகளின் ஒட்டுமொத்த மிதமடைதலின் தாக்கத்தினைப் பிரதிபலித்தாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.






அதேவேளை, அவசரமற்ற இறக்குமதிச் செலவினங்களைக்

கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகளும் இறக்குமதிக் கேள்வி அழுத்தங்களைக் கட்டுப்படுத்த உதவியதாக தெரிவித்தது.


இதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறையானது, ஜூலை மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட அழுத்தங்களைத் தளர்த்தியது என்று வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 


 2022 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஜூலையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் சிறிதளவு அதிகரித்துக் காணப்பட்டதாக வங்கி குறிப்பிட்டது


சுற்றுலாத்துறை வருமானம், குறைந்தளவிலான தளத் தாக்கத்தின் அடிப்படையில் 2022 ஜூலையில் (ஆண்டுக்காண்டு) அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்ததாகவும் அரச பிணையங்கள் சந்தையிலும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஜூலையில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதி வழங்கும் பொருட்டு மத்திய வங்கி வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையைத் தொடர்ந்தும் வழங்கியமையினால் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் பயன்படுத்தக்கூடிய மட்டம் குறைவடைந்து காணப்பட்டதாக வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »