(எம்.மனோசித்ரா)
நிலக்கரியை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாமல் செய்து, மின்துண்டிப்பு நேரத்தை நீடிக்கச் செய்வதற்கான திட்டமிட்ட சதி இடம்பெறுகிறது. இந்த சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அவசர தேவையாக நிலக்கரியைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
நிலக்கரி உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாதவாறு திட்டமிட்டு இறக்குமதியை இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் துண்டிப்பை நீடிப்பதே ஒரு சில தரப்பினரது எதிர்பார்ப்பாகும். தற்போது கிடைக்கப் பெற்றிருந்த நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு , கடந்த ஆண்டை விட குறைந்த விலையாகவே காணப்படுகிறது.
ஏனைய பொருட்கள் அனைத்தினதும் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் , நிலக்கரியின் விலை மாத்திரம் குறைவாகக் காணப்பட்டது. எனினும் சில தொழில்நுட்ப காரணிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக நிலக்கரியை இறக்குமதி செய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் அவசர தேவை கருதி நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.