ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆயுள் விரைவில் முடிவடையபோகின்றது – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
'இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை. அதன் ஆயுள் விரைவில் முடியப்போகின்றது. தேர்தல் ஒன்றின் ஊடாகவே ஆயுள் முடிவுக்கு கொண்டுவரப்படும். தற்போதைய அரசாங்கத்துக்கு நிலையான பயணம் இல்லை என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதே வழியில் பயணித்தால் தேசிய உற்பத்தில் முழுமையாக இல்லாமல் போகும். போராட்டம் வேறு வடிவில் வெடிக்கும். மாணவர்கள்கூட வீதிக்கு இறங்குவார்கள். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய பேரவையில் அங்கம் வகிக்காது.” – என்றார்.