கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கஞ்சா உற்பத்தி மூலம் நாடு பாரிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் இதற்கான ஆவணத்தை வகுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மருத்துவம் மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையினால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஆகவே கஞ்சா ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக அண்மைய நாட்களில் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பரவலாக கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் நான்கு டிரில்லியன் அளவிற்கு கஞ்சாவிற்கான கேள்வி இருப்பதாகவும் இதனை இலங்கை பயன்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல நூற்றாண்டுகளாக இவ்வாறான மருந்துகள் பாவனையில் இருந்ததாகவும், காலனித்துவ காலத்தில் தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.