தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரலாறு முழுக்க தவற விட்ட வாய்ப்புகள்தான் அதிகம். ஆகவே எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட இனி நாம் தயார் இல்லை. எமது மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூற எமக்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்துவோம். அந்த அடிப்படையிலேயே நாம் இங்கே வந்துள்ளோம்.
ஆனால், இதுவும் கதைக்கள கதாகாலேட்சபம் என்றால் நாம் விலகி விடுவோம். ஆனால், முன் கூட்டியே முடிவு எடுத்து, இது சரி வராது, என எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் நிராகரிக்கும் தேவை எமக்கு கிடையாது. அதேபோல் இன்று நடந்தது, தேசிய சபை கூட்டம். இது தேசிய அரசாங்கமல்ல. தேசிய அரசில் நாம் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் இன்று நிகழ்ந்த முதலாவது தேசிய சபை கூட்டத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கூட்ட நிறைவின் பின் கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது,
எங்கள் மக்களின் பிரச்சினைகளை, துன்பங்களை, துயரங்களை, கண்ணீரை, சொல்ல வேண்டிய இடங்களில் எல்லாம் சொல்லியே தீருவோம் என்ற, குரல் கொடுத்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் நமது கட்சி இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே நானும், திகாம்பரமும் இதில் இன்று கலந்துக்கொண்டோம். ஏனெனில் எங்கள் மக்களில் குறிப்பிட்ட பிரிவினர் விளிம்பு நிலையில் வாழ்கிறார்கள். இவர்களை பற்றி கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும், கிடைக்கும் எல்லா மேடைகளிலும் பேசா விட்டால், நாம் எதற்காக பாராளுமன்றம் வந்தோம்? ஆகவே அதை செய்வோம். ஆனால், விழிப்புடன் இருப்போம். சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்போம். வெறும் கதைக்களம்தான் என்றால் நாம் விலகி விடுவோம்.
மேலும் இன்று நாட்டின் நிதி உரிமை தொடர்பான பாராளுமன்றத்துக்கு இருக்கும் உரிமையை நாம் கோரினோம். குறிப்பாக பாராளுமன்றத்தின் நிதி கணக்காய்வு தொடர்பான கண்காணிப்பு குழுக்களின் தலைமை பதவிகளை எதிரணிக்கு தரும்படி நாம் கோரினோம். அப்படி இருந்தாலே அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னமேயே, கோதாபய ஆட்சி செய்த போது, இந்த நிதிக்குழுக்களின் தலைமை பதவிகள் எதிரணிக்கு வேண்டும் என நாம் கோரினோம். ஆனால், அரசாங்கம் அதை எமக்கு தரவில்லை. தமது ஆட்களை போட்டே அதை நிரப்பினார்கள். அரசாங்க அமைச்சர்கள், எம்பீக்கள் பாராளுமன்றத்துக்கு வந்து நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் உண்மைக்கு புறம்பாக பொய் சொன்னார்கள். அவர்களுடன் சேர்ந்து சில அரசு அதிகாரிகளும் பொய் சொன்னார்கள். குறிப்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் பொய் பேசினார். எமக்கு வேண்டிய அளவு பணம் இருக்கிறது. டொலர் இருக்கிறது. ரூபா இருக்கிறது. ஸ்டேர்லிங் பவுண்ட் இருக்கிறது என எல்லோரும் கூட்டாக பொய் சொன்னார்கள்.
கடைசியில், நாடு தலைகுப்புற கவிழ்ந்த போதுதான் உண்மை வெளிப்பட்டது. கஜானா காலி என்ற உண்மை வெளியானது. இதனால்தான் இத்தனை துன்பமும் என்பது நாம் எடுத்து கூறினோம்.
ஆகவே இந்த நிதி கணக்காய்வு தொடர்பான கண்காணிப்பு குழுக்களின் தலைமை பதவிகளை எதிரணிக்கு தருவார்களா என பார்ப்போம். பொருளாதாரத்தை கண்காணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த தேசிய சபை சாத்தியமாகும்.
அதேவேளை, பொருளாதார மீட்சிக்கு அப்பால் எமது மக்களின் தேசிய, சமூக, அரசியல் பிரச்சினைகளாகும் முன்வைக்க நாம் உத்தேசித்துள்ளோம். பாராளுமன்ற வாரங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும், பிற்பகல் இந்த சபை கூடும்.