Our Feeds


Sunday, September 18, 2022

SHAHNI RAMEES

சிறுவனுக்கு நடந்தது என்ன? தீவிர தேடுதலில் பொலிஸார்!

 

கொட்டாவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரை கடந்த 09 ஆம் திகதி முதல் காணவில்லை என கொட்டாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய, கொட்டாவ, ஹைலெவல் வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் குறித்த சிறுவனை பார்க்க கடந்த 09 ஆம் திகதி அவரது பாடசாலை நண்பர்கள் இருவர் வந்திருந்தனர்.

பின்னர், அவர்களில் ஒருவரின் கைத்தொலைபேசியை பழுதுபார்ப்பதற்காக சம்பந்தப்பட்ட மாணவரின் அடையாள அட்டையை பிணைக்கு வைத்திருந்த நிலையில் அதனை பெற்றுக்கொள்ள வருமாறு கூறி குறித்த மாணவனை அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் இரவு 10 மணி ஆகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால், குறித்த பழுது பார்க்கும் இடத்திற்கு அழைத்து கேட்ட போது சிறுவன் மதியம் 2 மணியளவில் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காணாமல் போன சிறுவனின் தந்தை சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, அருகில் உள்ள பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களை பரிசோதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி பிற்பகல் 2 மணியளவில் கொட்டாவைக்கு நடந்து வந்து ஹோமாகம நோக்கி பயணிக்கும் பேருந்தில் ஏறி மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திற்கு சென்றமை கண்காணிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து வெளியேறிய சிறுவன், மாகும்புர அரச மரத்திற்கு அருகில் வந்து பாதுக்கவில் இருந்து புறக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஏறி மீண்டும் கொழும்பு நோக்கி வந்த போதிலும் இது வரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, காணாமல் போனதாகக் கூறப்படும் சிறுவனை அழைத்துச் சென்ற நண்பர்களின் ஒருவரின் தந்தையை வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க போதிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »