Our Feeds


Monday, September 5, 2022

Anonymous

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காலாவதியான கண்ணீர்ப் புகை குண்டுகள்?; தகவல்களை வெளிப்படுத்த மறுக்கும் அடிப்படை என்ன?



எம்.எப்.எம்.பஸீர்


போராட்டக் காரர்கள் மீது  காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகளை  நடாத்தியமை  தொடர்பிலான தகவல்களை,  தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் என தெரிவித்து. வெளிப்படுத்துவதை மறுத்தமையானது எந்த அடிப்படையிலானது என எழுத்து மூலம்  அறிவிக்குமாறு  தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக் குழு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.


வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் தொடர்புபட்ட தகவல்கள்  கோரிக்கையாக முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், அத்தகைய  தகவல் கோரிக்கைகள் தொடர்பாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம்  செயற்படாமை தொடர்பில்  இலங்கை பொலிஸாருக்கு எதிராக  வழக்குத் தொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் இதன்போது ஆணைக் குழு எச்சரித்துள்ளது.

காலாவதியான கண்ணீர்ப் புகைக் குண்டுகள் தொடர்பில், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன முன்வைத்த தகவல் கோரிக்கை பிரகாரம்,  அந்த தகவல்களை வழங்காமை தொடர்பில்  தகவல் அறியும் உரிமைகள் தொடர்பிலான ஆணைக்குழுவில் அந்த ஊடகவியலாளரால் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மேன் முறையீடு  பண்டாரநாயக்க சர்வதேச மா நாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே பொலிசாருக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மேன் முறையீடானது,  தகவல் அரியும் உரிமை ஆணைக் குழுவின்  ஆணையாளர்களான  ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி வல்கம,  சட்டத்தரணி கிரிஷாலி பின்டோ ஜயவர்தன, சட்டத்தரணி  ஜகத் லியன ஆரச்சி ஆகியோர் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, தகவல் அறியும் உரிமை ஆணைக் குழு, பொலிஸார் சட்டத்தின் பிரகாரம்  செயற்பட்டு தகவல் வழங்காமை தொடர்பில் கேள்வி எழுப்பினர்.

கண்ணீர் புகைப்பிரயோகம் செய்ய காலாவதியான குண்டுகளை பயன்படுத்தியமை,  அவ்வாறு அவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கியது யார் உள்ளிட்ட தகவல்களை  தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் விடயங்கள் என்பதால் வழங்க முடியாது என கூறி பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  நந்தன முனசிங்க மறுத்து எழுத்து மூலம், தகவல் கோரிய ஊடகவியலாளருக்கு  பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் மேன் முறையீட்டை ஆராய்ந்த தகவல் உரியும் உரிமை ஆணைக்குழு, குறித்த தகவல்கள் எப்படி தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என விலக்குமறு பொலிசாருக்கு அறிவித்த போதும் அதனை விளக்க பொலிஸார் தவறினர்.

அத்துடன் 2010 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் கண்ணீர் புகைக் குண்டுகள் கொல்வனவு செய்யப்பட்டமையை மையப்டுத்திய விலை மனுக்களையும் தகவல் அறியும் உரிமை ஊடாக குறித்த ஊடகவியலாளர் கோரியிருந்த நிலையில்,  பொலிஸ் திணைக்களம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வழக்குகளுடன் தொடர்புபடாத ஆவணங்களை அழித்து விடுவதால்  குறித்த தகவல்களை வழங்க முடியாது என  பதிலளிக்கப்பட்டிருந்தது.

அந்த தகவல் உண்மையாயின்,  கடந்த 5 வருடங்களுக்குள் கண்ணீர் புகைக் குண்டுகள் கொள்வனவு செய்யப்படவில்லை என தெளிவாவதாகவும்,  அப்படியானால் போராட்டங்களின் போது பயனபடுத்தப்பட்ட  கண்ணீர் புகைக் குன்டுகள் 5 வருடங்களுக்கு முன்னர் கொள்வனவுச் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் எனவும்  மேன் முறையீட்டின் போது, மேன் முறையீட்டாளர் தரப்பின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம்,  12 வருடங்களுக்குட்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக வைக்க்ப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன்,  அது தொடர்பில் பொலிஸ் திணைக்களமே சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளதாகவும் அவ்வாறான பின்னணியில் பொலிஸாரே கோரப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறுவது தகவல் அறியும் சட்டத்தை மீறும் செயல் என ஆணைக் குழு சுட்டிக்காட்டியது.

அவ்வாறு சட்டத்தை மீறும் வகையில் பொலிஸார் செயற்பட்டால், நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும் எனவும் அதில் இரு வருடங்கள் வரையிலான  சிறைத் தண்டனைக் கூட விதிக்கப்பட முடியும் என ஆணைக் குழு  எச்சரித்தது.

இதனையடுத்து, குறித்த ஊடகவியலாளர் கோரிய தகவல்களில் சிலவற்றை வழங்க  பொலிஸார் சம்மதித்தனர். ஏனைய தகவல்கள் தொடர்பில்  எதிர்வரும் 10  ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்ட ஆணைக்குழு, மேன் முறையீட்டு விசாரணைகளை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »