சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளுக்கு விடைகொடுத்தார்.
அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்த அவர், நேற்று லண்டனில் ஆரம்பித்த லேவர் கிண்ணத் தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் பங்கேற்றார்.
இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின.
ஐரோப்பிய அணியில் இடம்பெற்றுள்ள ரொஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் மற்றும் ஒரு முன்னணி வீரரான ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ – ஜெக் சாக் இணையுடன் போட்டியிட்டனர்
இந்த போட்டியில் ரொஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ – ஜெக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவினர்.
இதையடுத்து டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரொஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.
ரொஜர் பெடரர், நடால் மற்றும் பிற வீரர்களைக் கட்டியணைத்து அழுதார். பின்னர் தமது பெயரைக் கோஷமிட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
‘இது ஒரு அற்புதமான நாள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் சோகமாக இல்லை. இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அதை முடித்ததில் மகிழ்ச்சி’ என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
41 வயதான அவர் ஒரு தொழில்முறை நிபுணராக ஓய்வு பெற்றுள்ளார்.
20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற சுவிஸ் வீரர், டென்னிஸ் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.