நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயலிழந்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை, தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாளை தொடர்கம் மின்வெட்டை நீடிக்காமல், மின் உற்பத்தியை பராமரிக்க தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் இருப்புகளை மின்சார சபைக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் மின்பிறப்பாக்கியை, மீள இயக்குவதற்கு 3 முதல் 5 நாட்கள் வரை செல்லும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
நீராவி கசிவின் காரணமாக இந்த மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மின் நிலையங்களை பயன்படுத்தி நிலைமையை நிர்வகிப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தற்போது பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இன்று 27) திட்டமிடப்பட்டிருந்த மின்சாரத் தடையின் காலம் மூன்று மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
இருந்தபோதிலும், மின் உற்பத்திக்கான எரிபொருள் விநியோகம் எதிர்பார்க்கப்படுவதால், நாளை (28) தொடக்கம் இரண்டு மணிநேரம் 20 நிமிடங்களாக மின்வெட்டு காலம் குறைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.