(எம்.எம்.சில்வெஸ்டர்)
ரஷ்யா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான இராஜதந்திர நட்பின் பிரதிபலிப்பாக, ஏரோஃப்ளோட் ஏயார்லைன்ஸ் விமான சேவையானது எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் தனது சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான ஏரோஃப்ளோட் விமான சேவையை மீள ஆரம்பிக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ரஷ்யாவின் பெடரல் விமான போக்குவரத்து நிறுவனத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, இந்த விமான சேவை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
ரஷ்ய ஏரோஃப்ளோட் எயார்லைன்ஸ் விமானங்கள் இலங்கைக்கு வருவதாயின், இலங்கை விமான சேவையானது உரிய நிறுவனங்கள் ஊடாக ஏரோஃப்ளோட் விமானங்களுக்கான எரிபொருட்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த உடன்படிக்கையின் பிரகாரம் நிறுவனம் செயற்படத் தவறினால், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வேறு இடத்துக்கு செல்வதற்கு விரயமாகும் எரிபொருளுக்கான செலவை இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஏரோஃப்ளோட் எயார்லைன்ஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது