கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் பேரில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சாஹரானின் சாரதி உட்பட 4 பேரை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா, இன்று (26) பிணையில் விடுதலை செய்தார்.
தலா 35 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி, சந்தேநபர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.
2018ஆம் ஆண்டு வவுணதீவு, வலையறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்துக்கு இலக்காகி இரு பொலிஸார் கொல்லப்பட்டமை மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
சாஹரானின் கார் சாரதியான கபூர் மாமா என்றழைக்கப்படும் சஹீர் ஆதம்லெப்பை, அப்துல் மனாப் மொஹொமட் பீர்தௌஸ், ஹம்சா மொஹொதீன் மொஹொமது இம்ரான், ஹய்யாது மொஹொமட் மில்ஹான் ஆகிய நான்கு பேரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஜடி) மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம். முகமட் அமீன் இவர்களை பிணையில் விடுவிக்குமாறு மன்றில் கோரிய நிலையில் பிணை வழங்கப்பட்டது.
மேலும், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் அடுத்த வழக்கு தவணையான எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ் மிரர்