Our Feeds


Thursday, September 29, 2022

Anonymous

வைத்திய பணிக் குழுவின் அலட்சியம்: ஊன நிலைக்கு ஆளான பிள்ளைக்கு 30 மில்லியன் ரூபா செலுத்த நீதிமன்று உத்தரவு!



(எம்.எப்.எம்.பஸீர்)


தமது எச்சரிக்கையுடன் கூடிய பொறுப்பை மீறியமைக்காக 30 மில்லியன் ரூபாவை ஊனமுற்ற பிள்ளை ஒருவருக்கு செலுத்த, கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 2012ம் ஆண்டு பிரசவம் ஒன்றுக்கு உதவிய வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட, பணிக் குழுவினருக்கு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி கல்ஹாரி லியனகே உத்திரவிட்டார்.


குழந்தை பிரசவத்தின்போது அக்குழந்தையின் தொப்புள் கொடி கழுத்து பகுதியை சுற்றி இறுதியுள்ளதை அறிந்திருந்தும்,சுகபிரசவம் ஊடாக அக்குழந்தையை பிரசவிக்கச் செய்தமையால் அக்குழந்தை நிரந்தர ஊன நிலைக்கு ஆளாகியமையை அவதானித்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

குறித்த பிரசவம் தொடர்பில் செயற்பட்ட வைத்தியர்களும், பணிக்குழுவினரும், குழந்தையின் கழுத்து பகுதியை தொப்புள் கொடி இறுக்கியுள்ள நிலையில் சுவாசம் தடைப்படுவதை அறிந்திருந்தும், அது தொடர்பில் மேலதிக பரிசோதனை எவற்றையும் முன்னெடுக்காது,சுக பிரசவத்துக்கு இடமளித்தமையால் ஒட்சிசன் குறைந்து குழந்தையின் கழிவுகள் வெளியேறி மூளையின் செயற்பாடு குறைவடைந்துள்ளமை தொடர்பில் சாட்சி ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தீர்மானித்த நீதிபதி இந்த தீர்ப்பை அறிவித்தார்.

நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் இந்த வழக்கின் தீர்ப்பை மனுதாரருக்கு சாதகமாக வழங்குவதாகவும்,குறித்த பிள்ளையின் எதிர்கால வாழ்வை கருத்திற்கொண்டு அவருக்கு தனது வாழ்வை முன்னெடுக்க இந்த பணத்தொகையை செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் பிறந்த சந்துனி ஆகாஷ் எனும் முறைப்பாட்டாளரான பெண் பிள்ளை மற்றும்,அவரது தாயார் இவ்வழக்கினை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் பணிக்குழுவினர் வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

அக்கால பகுதியில் சேவையாற்றிய வைத்தியசாலை பணிக்குழுவினரின் அலட்சியமான நடவடிக்கை காரணமாக தற்போது தனது பிள்ளைக்கு வாய் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கை,கால்களை அசைக்க முடியாமல் தொடர்ச்சியாக வலிப்பு நிலைக்கு முகம் கொடுப்பதாகவும் அதனால் அவரால் சாதாரண நபராக வாழ்வதற்கு முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் மனு ஊடாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் வைத்திய சான்றுகளும் மன்றில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »