இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று வருடாந்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதிமதியில் 10762 கோடி ரூபா) பெறுமதியான வரி ஏய்ப்பு செய்து வருவதாக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல்பொருள் அங்காடிகளை (Supermarket chains) நடத்தும் எந்தவொரு நிறுவனமும் ஒரு சதம் கூட வரி செலுத்துவதில்லை எனவும் அவர் இதன்போது கூறினார்.
“நாடாளாவிய ரீதியில் 48 விற்பனை நிலையங்களைக் கொண்ட ஒரு பிரபலமான துணிக்கடையும் உள்ளது, அது ஒரு சதம் கூட வரி செலுத்துவதில்லை. ஒரு பெரிய ஆடை நிறுவனம் ஆண்டுதோறும் ரூ. 700 மில்லியன் சம்பாதிக்கிறது; ஆனால் வரி செலுத்துவதைத் தவிர்த்து வருகிறது.
இதேவேளை, அரச வங்கியில் 1.4 மில்லியன் ரூபாய் சம்பாதிக்கும் மூத்த அதிகாரி ஒருவரின் வரிகளை – அந்த வங்கியே செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
“உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டால் மொத்தத் தொகையினையும் அல்லது 03 பில்லியனை வரியாக ஈட்ட முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 225 எம்.பி.க்களுக்கும் புதிய வரிக் கோப்புகளைத் திறக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட அவர்; இதன் மூலம் வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றார்.