(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்ததை தொடர்ந்து 13 உறுப்பினர்களின் பேச்சுரிமை முடக்கப்படுகின்றமை மக்களாணைக்கு விரோதமானது. எமது பேச்சுரிமையை பாதுகாக்க அவதானம் செலுத்துமாறு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
சபாநாயகர் தலைமையில் இன்று (08) வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றில் நான்கு குழுவினர் சுயாதீனமாக செயற்படுகிறார்கள்.3 சுயாதீன குழுக்களுக்கு விவாதத்தின்போது உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்படுகிறது. ஆனால் 13 உறுப்பினர்களை உள்ளடக்கிய எமது குழுவுக்கு நிறைவடைந்த இரு விவாதத்தின் போதும் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இவ்விடயம் குறித்து ஜனாதிபதி,பிரதமர்,சபாநாயகர், சபை முதல்வர் மற்றும் ஆளும் தரப்பின் பிரதம கொரடா உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அறிவித்தோம். இருப்பினும் எமது கோரிக்கை குறித்து இதுவரை அவதானம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.