(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டின் மின்சார உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணி நேர மின்வெட்டு ஏற்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள 250,000 மெட்றிக் டொன் நிலக்கரி ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதுடன், நுரைச்சோலையில் உள்ள இரண்டு மின் உற்பத்தி பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு நாளொன்றுக்கு 5,000 மெட்றிக் டொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் மேலும் கூறுகையில்,
“நிலக்கரி இல்லாவிட்டால், நாட்டின் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து 900 மெகா வொட் மின்சாரத்தை இழக்க நேரிடும். நாட்டின் 35 சதவீத மின்சார உற்பத்தியானது நிலக்கரியிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
நிலக்கரிக்கான விலை மனுக்கோரலின்போது, மிகக் குறைந்த விலையை சமர்ப்பித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட போதிலும், அதற்கெதிராக மற்றுமொரு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையினால், விலை மனுக்கோரலின்போது அனுமதியைப் பெற்றுக்கொண்ட நிறுவனமானது நிலக்கரி வழங்க மறுத்துள்ளதன் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருந்து விடுபட ஐந்து நாட்களுக்கு ஒருமுறை நிலக்கரி கப்பலை இலங்கைக்கு கொண்டு வர 21 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஜனக்க ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.