பிறந்து ஏழு நாட்களே ஆன தனது கைக்குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற இளம் தாய், நேற்று (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் பணிபுரியும் தாதியொருவரின் கணவரும் இதன்போது கைதானதாகத் தெரியவருகிறது. இவர் குழந்தையை விற்பதற்கு ஏற்பாடு செய்தவர் எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய – குழந்தையை விற்பனை செய்த பெண்ணுடன் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரையும், குழந்தையின் தந்தை, அரசாங்க வைத்தியசாலையின் தாதி, வைத்தியசாலையின் உதவியாளர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பாடசாலை ஆசிரியர்கள் உட்பட மேலும் பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் 40 வயதுடைய ஆண் ஒருவருடன் ஒன்றாக வசித்து வந்த கெபிட்டிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரே தனது குழந்தையை விற்பனை செய்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பெண் குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தமக்கு ஒன்றரை வயது மகனும் இருப்பதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.