Our Feeds


Saturday, August 13, 2022

SHAHNI RAMEES

சர்வக்கட்சி அரசில் பிரதமர் பதவியை தமிழருக்கு வழங்குமாறு பரிந்துரை..!

 சர்வக்கட்சி அரசில் அமைச்சரவையை வரையறுத்து பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளைத் தமிழர், முஸ்லிம்கள் இடையே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் இலங்கை தொடர்பில் சர்வதேசத்துக்குச் சிறந்த செய்தியை கொண்டு செல்ல முடியும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் டலஸ் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


இதன்போது டிலான் பெரேரா எம்.பி. மேலும் கூறுகையில்,


“நான் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின்போது 


டலஸ் அழகப்பெருமவுக்கே ஆதரவளித்தேன்.

அதற்குக் காரணம் சர்வகட்சி அரசை அமைக்க வேண்டும் என்று பலரும் விடுத்த கோரிக்கையே ஆகும். சஜித் பிரேமதாஸவே அவரின் பெயரைப் பரிந்துரைத்திருந்தார். அதற்கு முதல்நாள் வரையில் டலஸ் அழகப்பெருமவுக்கே பெரும்பான்மையானவர்கள் ஆதரவளிக்கத் தீர்மானித்திருந்தனர். 90 வீதமானவர்கள் அந்தத் தீர்மானித்திலேயே இருந்தனர். இதன்படியே நான் வாக்களித்தேன்.


இதற்கு முன்னர் ஜனாதிபதிகள் பலரின் சிம்மாசன உரைகளைக் கேட்டுள்ளோம். அவர்கள் சட்டபூர்வமாகத் தெரிவாகிய ஜனாதிபதிகளாகும். ஆனால், அண்மையில் வேறு முறையில் அரசமைப்பு ரீதியில் வந்தார் எனக் கூறப்படும் ஜனாதிபதியின் உரையைக் கேட்டோம். அவர் சர்வகட்சி அரசு தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.



இந்நிலையில், சர்வதேசத்துக்குச் சிறந்த செய்தியொன்றைக் கூற முடியும். அமைச்சரவையை வரையறுத்து பிரதான பதவிகளை மற்றைய இனத்தவர்களிடையே பகிர்ந்துகொள்ளலாம். சிங்களவர் ஒருவர் ஜனாதிபதியாக இருந்தால் தமிழர் ஒருவரைப் பிரதமராக்கலாம். ஏன் இங்கு இவ்வாறு முடியாது? அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமாவுக்கு ஜனாதிபதியாக முடியுமென்றால் இங்கே தமிழ் பேசும் ஒருவர் பிரதமராகினால் என்ன? முஸ்லிம் ஒருவர் இங்கே சபாநாயகராகினால் என்ன? இதன்மூலம் இனவாத மனநிலையில் இருந்து விடுபட்டுள்ளோம் என்று சர்வதேசத்துக்குக் கூற முடியுமாக இருக்கும்.


புரட்சிகரமான இனவாதம் அற்ற போராட்டக்காரர்கள் கேட்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவையை அமையுங்கள். இதனைச் செய்து சிறந்த செய்தியை சர்வதேசத்துக்குவே வெளிக்காட்டுங்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து எம்.பிக்களையும் உள்ளடக்கி துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமையுங்கள்” – என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »