முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும்
அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (19) கண்டியில் தெரிவித்தார்.அப்படியொரு முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.
இன்று (19) கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
“இந்த நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் சுதந்திரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இருக்க வேண்டும். அவர் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்த நாட்டிற்கு சேவை செய்ய வந்தார். எனவே, அவர் போராளிகளுக்குப் பயந்து வெளிநாடுகளில் ஒளிந்து கொள்வதை அனுமதிக்க முடியாது. இது அவரது மனித உரிமை மீறலாகும்.
எனவே, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர் இந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இடைக்கால அரசாங்கம் அல்லது இடைக்கால நிர்வாகத்தை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தோம். ஏனெனில், இந்தப் பிரச்சினையை மேலும் இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது. நாடு டொலர் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது.
இன்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு நாடாளுமன்றத்தில் 145 உறுப்பினர்கள் உள்ளனர். ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுன 125க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் அந்த பெரும்பான்மை பெரும் பலமாக உள்ளது.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையானோர் இன்று எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கடந்த அரசாங்கத்தின் போது ஜனதா விமுக்தி பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி போன்ற கட்சிகள் தற்போதைய ஜனாதிபதியுடன் இருந்தன. எங்களை விட ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது அவர்களுக்கு இலகுவானது.
இதற்கு முன்னர், ‘நீங்கள் அனைத்துக் கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவளித்தால் நல்லெண்ண அடிப்படையில் ஆதரவளிக்கவும். அதற்காக நாம் எமது அமைச்சினை விட்டுக்கொடுக்கவும் தியாகங்களைச் செய்யவும் தயாராக இருக்கின்றோம்’ என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறினோம்” என்றார்.
உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களை நியமிக்கும் நோக்கில் பொருத்தமான நபர்களை நியமிக்கும் உரிமையை கட்சிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது குறிப்பிட்டார்.