Our Feeds


Sunday, August 14, 2022

SHAHNI RAMEES

ஓர் அணியாக இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்வதாக சஜித் தெரிவிப்பு..!

 

நாட்டில் தற்போது வரை நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் வங்குரோத்து நிலைமைகள் காரணமாக பலம் வாய்ந்த நாடுகளுக்கு வேட்டைக்களமாக இலங்கை மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதன் மூலம் தேசிய பாதுகாப்பு கூட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சர்களால் இந்நாட்டின் முதுகெழும்பு உடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் “ஐக்கிய பாதை”க்கு பதிலாக “தவறான பாதையை” தெரிவு செய்ததன் அவலத்தை இன்று நாடு எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டை கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கிய மக்கள் சக்திக்கே உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று (13) ஹோமாகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹோமாகம தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி எரந்த வெலியங்க இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பு ரீதியாக சரியானது என்றாலும், அங்கீகாரம் மற்றும் மக்கள் அபிப்பிராயம் என்ற அடிப்படையில் இது முற்றிலும் மாறுபட்ட நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தை விட நிகழ்காலம் முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்நாட்களில், பெரும்பாலும் அரசியல் முடிவுகளை எடுப்பதில் முன்னுரிமை பெற்றது பெரியவர்களே என்றாலும், இன்று இளம் தலைமுறையினர் அதை வீட்டில் கூட பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். தேர்தலில் முடிவெடுப்பது குறித்து வீட்டில் செல்வாக்கு செலுத்துவது இளைஞர் சமுதாயத்தினரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களின் பிரகாரமே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

தம்மிடம் இரத்தம் சிந்திய வரலாறு இல்லை எனவும்,தமது வங்கி கணக்குகளில் போதைப்பொருட்கள் விற்ற பணம் இல்லை எனவும்,தம்மிடம் எந்த வித கபடத்தனமும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஓர் அணியாக இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »